Sunday 1 November 2020

1973 ல் கோவையில் நடை பெற்ற வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலர் படைத்த மாநாட்டு அறிக்கை ஒரு காலப் பெட்டகம் . 25 ஆண்டுகளுக்கு முந்தைய நமது நிலையையும் , இயக்க வளர்ச்சியையும் ஒப்பிட்டு நோக்கும் . காலக் கண்ணாடி , அது மட்டுமல்ல . அன்றைய கோரிக்கை கல்வி வாரியம் அன்றைய கொள்கை அரசியல் சார்பற்றது . 25 ஆண்டுகளுக்கு முன்பே எத் தனை தெளிவான கண்ணோட்டத்துடன் பொதுச் செயலர் செ.மு. அறிக் கை படைத்துள்ளார் என்பது வரலாறு ! இதோ அந்த அறிக்கை ! நீங்களும் படித்து மகிழ மறுபதிப்பாகிறது

மாநில பொதுச் செயலாளர் அளித்த வெள்ளி விழா மாநாட்டு அறிக்கை

 1973 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 21 ஆம் நாள் கோவை நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலரால் படைக்கப் பட்ட அறிக்கை , இன்று தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 25 ஆண்டுகளைக் கடந்து விட்டது . இவ்வியக்கம் தமிழ்நாடெங்கிலும் அங்கிங்கெனாது எங்கும் நிறைந்து காணப்படும் வளர்ச்சி பெற்ற மாபெரும் அமைப்பாகத் திகழ்கின்றது . ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி உயர்ந்து நிற்கிறது . இதைக்கண்டு பூரிப்போரும் உண்டு , பொறாமை கொள்வோரும் உண்டு . இவ்வியக்கத்திற்கென உண்டாகி விட்ட 25 ஆண்டு கால வரலாறும் வரலாற்றுத் திருப்புமுனைகளும் , அதன் பயனாய் கேட்பாரற்று , மதிப்பாரற்று கிடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் சமுதாயம் பெற்ற நன்மைகளும் ஏராளம். தொடக்கப் பள்ளி ஆசிரியர் இனம் இவ்வியக்கத்தைப் பேணிக் காத்து அதன் பயனைப் பெற்றும் வருகிறது . தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளியில் பணி புரியும் எந்த ஆசிரியனும் இவ்வியக்கத்தை அறியாமலில்லை , நான்கு சுவருக்குள்ளே இந்த நாட்டின் எதிர்காலத்தை , தலை விதியை ப் படைக்க வல்லது இச்சமுதாயம் . ஜெர்மானிய மக்களெல்லாம் தன்னைப் பாராட்டத்திட்டம் வகுத்த இட்லர் பயன்படுத்தியது ஆசிரியர்களைத்தான் . இதன் மூலம் தன் நாட்டை வளர்த்து உலகம் கண்டு அஞ்சிய தளபதியாய்த் திகழ்ந்தான் . ஏன் மறைந்த மாமேதை அறிஞர் அண்ணா சொன்னார் , மாநில ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய பின் , ஆசிரியர்கள் தான் இந்த ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படை வகுத்தவர்கள் . நான் என்றும் மறவேன் அவர்களை உள்ளத்திலே சுமந்து ஓர் உருவம் கோட்டையில் உலாவி வரும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்கள் . இவையெல்லாம் சிறப்புகள் . இவற்றைப் பேசுவதால் பயன் ஏதும் ஆகப் போவதில்லை . இவைகள் எல்லாம் உண்மைகள் என்பதற்காகவே குறிப்பிடுகிறேன் இயக்கத் தோற்றத்தையும் 25 ஆண்டு கால சாதனையின் பட்டியலையும் ஓரளவு தந்து விட்டு , இன்றைய அளவின் தேவைகளையும் , அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்க விரும்புகிறேன்