Monday 8 June 2020

ஆசிரியர் காவலன்- செ.மு._திரு.இ.இரத்தினம்

" தமிழனென்று சொல்லடா- தலைநிமிர்ந்து நில்லடா" என்று இனிய சொற்களால் பாட்டிசைத்து மக்களை நாட்டு விடுதலைப் போராட்டத்தில் வீறுகொள்ளச் செய்த " நாமக்கல் கவிஞர்" அவர்கள் பிறந்த மண்ணிலே தோன்றி, தாழ்ந்து கிடந்த, கூனிகுறுகிப் போயிருந்த ஆண்டான் அடிமை நிலையிலிருந்த ஆசிரியர் சமுதாயத்தை தலைநிமரச் செய்த, நாடு உலகு அறியச் செய்த பெருந்தகை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் மதிப்புக்குரிய பெருந்தகை திருமிகு  செ.முத்துசாமி அவர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம், ஏராளம்.

அவைகளில் ஒரு சில வற்றை மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

1968 நவம்பர் திங்களில்பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்து ஆசிரியர்களின் அவலநிலைமையை எடுத்துக்கூறி ஆசிரியர்கள் இடையில் உணர்ச்சியினை ஊட்டினார்.ஆசிரியர் இயக்கத்திற்கென தனிக்கொடி, சின்னம் கண்டார்.ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மாநிலமெங்கும் கோரிக்கைகள் அடங்கிய" அஞ்சல் அட்டை இயக்கத்தை" ஆசிரியர் தினமான செப்டம்பர் திங்களில் நடைபெறப் செய்தார்.

1969 ல் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவின்படி இரவோடு இரவாக கொட்டும் மழையில் லாரியில் அழைத்து சென்று" சென்னை கடற்கரையில் பேரறிஞர் அண்ணா சமாதி முன் கோரிக்கைகள் வெற்றி பெற உறுதி மொழி எடுத்துக் கொண்டு கோட்டை நோக்கி அங்கிருந்து ஊர்வலமாக சென்று இடையில் ஊர்வலம் தடுக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் மட்டும் கோட்டைக்குச் சென்று கோரிக்கை மனுக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி மறக்க இயலாததாகும்.தமிழகத்தில்" மேற்கு மலை முகட்டிலிருந்தும் தென்முனை குமரியிலிருந்து" மிதிவண்டிப் பேரணி நடத்தி பெரியார் திடலில் கோரிக்கை மாநாடு நடத்திக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாநாட்டுச்
செய்தியை இருட்டடிப்புச் செய்த" தினத்தந்தி" செய்தித்தாளை தீயிட்டு கொளுத்தினர்.திடல் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து புகைமண்டலம் சூழ்ந்து கொண்டு நிலையில் சென்னை நகர காவல் துறை ஆணையரால் அச்சூழ்நிலையைக் கட்டுப்படுத்த இயலாத போது நமது பொதுச்செயலாளர் அவர்கள் தலையிட்டு வேண்டுகோள் விட்ட மறுவினாடி புகைமண்டலம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.


மாநாட்டில் சிறப்புரை

   ஆற்றிய அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு" நாவலர் நெடுஞ்செழியன்" அவர்கள் சொற்களால் மாநாட்டுப் பந்தலே அதிரும் அளவுக்கு பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டப் போது பொதுச்செயலாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் ஊசி முனை அமைதி ஏற்பட்டது மறக்க இயலாத நிகழ்ச்சி
    1969 ல் கோரிக்கை மாநாடு நடத்தி வெற்றி கண்டதின் அடிப்படையில் இவரது அயராதுஉழைக்கும் பணியை உணர்ந்த உயர்நிலை முதல் கல்லூரி வரை பணியாற்றும் ஆசிரியர்கள் 1970 ல் நடைபெற்ற சட்டமன்ற மேலவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த நிலை ஆசிரியர் இயக்க வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒன்றாகும்.
  இவரது பணியின் காரணமாக, சிறிதும் கையூட்டுப் பெறாத நிலையில் மீண்டும் 1978 ல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெறச் செய்தனர்.இவரது சட்டமன்றப் பணி அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்ட நிலை " டாக்டர்கலைஞர்" அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தில் ஆசிரியர் பிரச்சனை ஒன்றையே மையமாக  வைத்து வாதாடி வெற்றி கண்டுள்ளார். 

  இயக்க நிறுவனர் மாஸ்டர் இராமுண்ணிக்கு மணிவிழா மாநாட்டினை 1970 டிசம்பரில் மதுரை மாநகரிலே நடத்தி வெற்றி கண்டுள்ளார்.

அம்மாநாட்டில் கலந்து கொண்ட அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சர் மாண்புமிகு ப.உ.சண்முகம் அவர்கள் முதல்வர் அவர்களின் அனுமதியின் பேரில் இயக்கத்திற்கென கட்டடம் கட்ட சென்னை மாநகரிலே அடிநிலமும் நிதியும் வழங்க உறுதி மொழியினை அளித்தார்.

முதன் முதலில்1972 ஏப்ரல் 30 ம் நாள் கல்வி அமைச்சர் அவர்கள் இல்லத்தின் முன் தனது தலைமையில் கோரிக்கைகளுக்காக மறியல் போராட்டம் நடத்தி 18 பேருடன் முதன் முதலில்  சிறையேகினார்.
 அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து ஆசிரியர்கள் தலைநகர் திரண்டு18 நாட்கள் தொடர்ந்து மறியல் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பட்டனர்.அப் போராட்டத்தின் போது சிறையிலேயே செயற்குழு கூடி அரசினால் கொடுக்கப்பட்ட அரசாணைகள் பெறப்பட்டு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது வரலாற்று முதற்படியாகும்.

1981 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் வாரத்தில் தமிழகமெங்கிருந்தும்
2500 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை நாட்டின் தலைநகராம் டில்லி மாநகருக்கு அழைத்துச் சென்று அங்கே " மாவ்லங்கர்" கலையரங்கத்தில் மாநாட்டினை நடத்தி நடுவண் அரசு அமைச்சர் பெருமக்களும் அரசியல்  கட்சித் தலைவர்களையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார்.நாட்டின் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டு, தேசீய ஊதியக்குழு அமைக்க வாதாடினார்.

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட டாக்டர்சட்டோபாத்திய கல்விக் குழுவின் அழைப்பின் பேரில் குழுவின் முன் சாட்சியம் அளித்து ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு வாதாடினார்.
  தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்அவர்களால் பள்ளிகளில் சத்துணவு துவக்கப்பட்டு,தலைமை ஆசிரியர்களின் தலையில் அப்பணி சுமத்தப்பட்ட நிலையில் நாடெங்கிலும் *ஆசிரியர்கள் *அலுவராலும்,பொதுமக்களாலும் ஆசிரியர்கள் துன்புறுத்ப்பட்டநேரம்.அந்நிலையினை கண்டித்து தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சத்துணவு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நமது பொதுச்செயலாளரை அன்றைய தலைமைச் செயலாளர்க.திரவியம்அவர்கள் சிறப்பு செய்தி ஆள் மூலம் மாமல்லபுரத்திற்கு அழைத்து பேசி விரைவில் புதிய ஏற்பாடு செய்யும் வரை போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் பொருட்டு எழுத்து மூலம் வேண்டுகோள் விடப்பட்டதின் பேரில் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதும்,
  அதற்கென தனியாக ஆயிரக்கணக்கில் அமைப்பாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டதும் வரலாற்று உண்மை.

1985ல் " ஜாக்டீ" அமைக்கப்பட்டு 44 நாட்கள்‌ போராட்டம் துவக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர்.உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்13 பேரில் நமது பொதுச்செயலாளர் மட்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டது வரலாறு.அச்சிறையில் ஈரோடு மாவட்ட ஆசிரியர் கருப்பண்ணன் உயிர் நீத்த செய்தி அறிந்து ஆசிரியர்கள் வெகுண்டெழுந்தனர்
.
அந்நிலையில் அச் சிறையிலிருந்து நமது பொதுச்செயலர் அவர்கள் ஆசிரியர்களின் உணர்ச்சியினை உணர்ந்து அமைதி காத்தனர்.அன்றைய பொழுது பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் உயிர் காத்தது வரலாற்று பெருமை சேர்த்தனர்.

1988ல் நடைபெற்ற போராட்டத்தின் மூலம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்தாவது ஊதியக்குழு அமைக்கவும் நடுவணரசு ஊழியர்களின் ஊதியம் பெற உறுதிமொழி பெற்றார்.அத்துடன் மருத்துவபடியினையும் பெற்றுத் தந்தார்.அன்றைய காலகட்டத்தில் *தலைமை நிலையச் *செயலாளராகப் பொறுப்பேற்று அவருடன் இணைந்து பணியாற்றியது எனது வாழ்நாளில் மறக்கலாகாத ஒன்றாகும்...ஐந்தாவது ஊதியக்குழு வினால் தலைமை ஆசிரியர்கள் ஊதிய நிலை பரிதாபகரமான நிலை.அத்துடன் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக முன் அவரது சீரிய தலைமையில் போராட்டம்.உண்ணாவிரதப்போராட்டம் நிறைவடையும் முன் அதற்கான அரசு ஆணைபந்தலிலேயே வழங்கப்பட்டது.

" டிட்டோஜாக்" அமைப்பின் மூலம் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது ஆணைகள் பெறப்பட்டு வெற்றிக் கண்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முழு ஊதியம் பெற்றுத் தந்தது வரலாற்றுச் சான்று.

இப்போராட்டத்தின் மூலம் நடுநிலைப்பள்ளி பட்டாதாரி தலைமையாசிரியர்கள் இன்று கல்வித் துறையின் நிர்வாகப் பொறுப்பேற்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவரது சீரிய முயற்சியின் பொருட்டேயாகும்.இந்நிலை தொடக்கக் கல்வியின் வரலாற்றில்
பொன்னேடாகும்.

ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலர் பொறுப்பேற்றதிலிருந்து தனது வாழ்வின்முழுவதும் ஆசிரியர்களின் நிலை உயர போராட்டங்கள் மூலமும், அரசு அலுவலர் நேர்காணல் மூலமும், சட்டமேலவை மூலமும் அயராது இருபத்தேழு ஆண்டு காலமாக உழைத்து வரும் பெருமதிப்பிற்கும் பெருமைக்கும் உரிய பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்களின் பணி மேலும் சிறக்க உயர வெள்ளிவிழாவோடு நிற்காது பொன்விழா காண விழையும் தங்களுக்கு நல்வாழ்த்தினையும் வணக்கத்தினையும் பெருமையோடும் பூரிப்போடும் அர்ப்பணிக்கிறேன்.

எழுதியவர்:- திரு.இ.இரத்தினம் , தருமபுரி மாவட்டத் தலைவர்

பொன்விழா மலரிலிருந்து.07-10-1995
தகவல்:- செ.வடிவேலு.

No comments:

Post a Comment