Monday 8 June 2020

ஆசிரியர்களின் விடிவெள்ளி...செ.மு.-(திரு.துரை.ஆறுமுகம்,)

         நாடு விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் ஆகியும் ஆசியர் பெருமக்கள் விடுதலை அடைந்திட வில்லை.அந்த தருணத்தில்1967 ல் இயக்கத்தின் பொதுச்செயலரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்று தமிழ்நாட்டில் பட்டி,  தொட்டிகள் தோறும் சென்று ஆசிரியர்களை சந்தித்தும் அவர்களின் பிரச்சனை அறிந்தும் வந்தவர்.1968 ல் இயக்கத்தில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, இதோ வந்தேன்" ஆசிரியர்களின் முழு நலனும் என் நலன்" " ஆசிரியர்களின் குறை என் குறை" என்று குரல் கொடுத்தவர் ஆசிரியர்களின் விடிவெள்ளியான நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி ஆவார்

             .வரலாறு காணா ஆசிரியர்களின் பேரணி சென்னை வீதிகள் காணாத சிறப்பு ஆ! இவ்வளவு ஆசிரியர்களாக? இவர்களுக்கு இவ்வளவு குறைகளா? என்று  சென்னை மக்கள் கண்டு வியந்த மாநாடு 1969 கோரிக்கை மாநாடு.நான்கு சுவர்கட்கு மத்தியில் இருந்த ஆசியர்கட்கு தங்கள் பிரச்சனைகளை கோடிட்டு காட்டிப் போராட நடு வீதிக்கு கொண்டு வந்தவர் தான் நம்மால்" விடிவெள்ளி" என்று அழைக்கப்படும் திரு.செ.முத்துசாமி.

                       அன்றுவரை அடிமைகளிலும் அடிமைகளாக நடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களின் சில பிரச்சனைகளுக்கு இந்த மாநாட்டில் தானே தீர்வு காணப்பட்டது.
                   வீட்டு வாடகைப்படி, அரசு ஊழியர்களைப் போல் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, தனியார் பள்ளி ஆசிரியர்கட்கு பணி பாதுகாப்பு குழு ஆகியவை கிடைத்தது.அதனால் தானே இவரை" ஆசிரியர்களின் விடிவெள்ளி" என்கிறோம்.
1970 ல் இயக்க நிறுவனருக்கு மதுரையில் மணிவிழா கண்டவர்.
1970 ல் வாக்குரிமையில்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர் மேலவை உறுப்பினரானார்.அதனால் ஆசிரியர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆனார்.

       1972 ல் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தில் ஆசிரியர் தொகுதியில் அறுவர்- பட்டதாரி தொகுதியில் அறுவர் மேலவையில் இருந்தும் இவர் தானே அவர்களை தேடிச் சென்று முதல் நாள் போராட்டத்தில் முதல் கைதியானார்!
 1972ஏப்ரல் 30 ல் குடும்பகட்டுபாட்டிற்கு ஆசிரியர்களை பயன்படுத்திய கொடுமையினை நீக்கி 18 நாள் போராட்டம்  1020 ஆசிரியர்கள் சிறையில் இதிலும் திரு.செ.முத்துசாமி தானே முதல் கைதி!.கலைஞரிடம் பெற்ற பெரிய வெற்றி. எண்ணிப்பார்த்திடாத ஆசிரியர்கள் இப்படி ஒரு போராட்டம்- சிறை- கோரிக்கை வெற்றி இவைகளுக்கு வித்திட்டது யார்?  ஆசிரியர்களின் விடிவெள்ளி திரு.செ.முத்துசாமி தானே.
இவரின் சாதனைகள்:-
தொடர்ந்து 1968 முதல் இன்று வரை 27 ஆண்டுகள் பொதுச்செயலாளரர்.12 ஆண்டுகள் மேலவை உறுப்பினர்( வாக்குரிமை இல்லாத இவர்) 110 நாட்கள் தமிழ்நாடெங்கும் பயணித்து முதன் முதலாக மாநிலத் தலைநகரில் இயக்கத்திற்கு ஒரு சொந்தக் கட்டிடம் கண்டவர்.தலைமைஆசிரியர்களுக்கு தனிப்படி,
ஒப்படைப்பு விடுப்பு ஆணை பெற்றது, தனி ஒரு ஆசிரியர்க்கும் இரயில் கட்டண சலுகை,
முதன் முதலாக டெல்லிக்கு 2500 ஆசிரியர்களை அழைத்துச் சென்று இந்தியப் பிரதமரிடம்
" மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் ஆசிரியர்கட்கும் தேவை" என வாதிட்டது.( அதன் பலன் 01-06-1988 முதல் கிடைத்தது)
" ஜேக்டி போராட்டத்தில் 13 தலைவர்கள் இருந்தும் அரசு Fire Brand செ.முத்துசாமியை தானே சிறையில் அடைத்தது". இராஜ்யசபா பெட்டிஷன்
கமிட்டியில் தமிழகத்து ஆசியர்கட்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என மனு கொடுத்து   ஒன்றரை மணி நேரம் கோரிக்கையின் நியாயத்தை எடுத்துக் கூறியது.வரி கொடா இயக்கம் போன்று போராடி சத்துணவிற்கென தனி ஊழியர்களை நியமித்தது.இன்று கைமேல் பலன் நடுநிலைப் பள்ளி பட்டம் பெற்ற தலைமையாசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக நியமனம் செய்ய உழைத்தது

.ஆசிரியர்களின் பிரச்சனைகளை ஆசிரியர்களே அறியாத போது எடுத்துச் சொல்லி  தீர்வு கண்டவர் தானே திரு.செ.முத்துசாமி என்ற விடிவெள்ளி.

அன்று முதல் இன்று வரை தொடக்கப் பள்ளி ஆசிரியரின் பொதுச் செயலாளரான இவர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சனைகள் எதுவானாலும், எப்போதும், இன்னார், இனியர் என்று பாராமல் நமக்காக வாதாடி போராடிப் பெற்றுத் தந்தவர்.அதற்காக குடும்பத்தை மறந்து பாடுபட்டு வருபவர் நமது பொதுச்செயலாளர் விடிவெள்ளி திரு.செ.முத்துசாமி ஆவார்.

இவரால் பெற்ற நன்மைகள் ஏராளம், இவர் தான் ஆசிரியர்களின் விடிவெள்ளி சமுதாயக் காவலர் என்பதில் ஐயமே இல்லை.


எழுதியவர்:-
 திரு.துரை.ஆறுமுகம், 
 மாவட்டச் செயலர்.திருவண்ணாமலை மாவட்டம்.

பொன்விழா மலரிலிருந்து 07-10-1995
தகவல்:- செ.வடிவேலு.

No comments:

Post a Comment