Friday 15 May 2020

ராஜன் நகர் போராட்டம்.. ஐந்து பெண் ஆசிரியை களின் பணிநீக்கத்தை ரத்து செய்யக்கோரி-செ.மு.

ஈரோடு மாவட்டம் பண்ணாரிக்கு அருகில் உள்ளது ராஜன்நகர்.அங்குள்ள கஸ்தூரிபா உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகத்திற்கு எதிராக அவ்வூரில் நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி எம்.எல்.சி தலைமையில் நடைபெற்ற போராட்டமும்,கண்டன ஊர்வலமும் நமது இயக்க வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும்

.கோவைமாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் தோன்றாத நிலையில் கோவை மாவட்டக்கிளையில் இயங்கிய கொடுமுடி வட்டாரத்திலிருந்து சென்று மேற்படி போராட்டகளத்தில் கலந்து கொண்டவன் என்ற முறையில் அது பற்றிக் குறிப்பிட விழைகிறேன்.ராஜன்நகர்-கஸ்தூரிபா உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள் என்பதற்காக 1977 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரே நாளில் அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர்கள் இருவர், பட்டதாரி ஆசிரியர்கள் இருவர், தொழில் ஆசிரியர் ஒருவர் ஆக  5 பெண் ஆசிரியைகளையும் மிரட்டி, வற்புறுத்தி ராஜினாமாக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு பணியிலிருந்து அவர்களை நிர்வாகம் நீக்கி விட்டது.
         அவ்வாசிரியைகள் நமது இயக்க உறுப்பினர்கள் அல்ல என்ற போதிலும், கோவை, சேலம், தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களுக்கான ஆசிரியர் தொகுதியின் சட்டமன்ற மேலவை உறுப்பினரான நமது பொதுச்செயலாளரான திரு.செ.முத்துசாமி அவர்களிடம் விண்ணப்பித்து தங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, தனது சார்பாக இயக்கத்தின் வட்டார, மாவட்டப் பொறுப்பாளர்களை பேச்சு வார்த்தைக்காக நிர்வாகத்திடம் அனுப்பி வைத்தார்.நிர்வாகத்தினால் நமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி வட்டார அமைப்பு ஆசிரியர்களைத்திரட்டி மேற்படி ராஜன் நகரில் நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டும் மாபெரும் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்தி  பொதுமக்களுக்கு இப்பிரச்சனை மீதான கவனத்தைக் கொண்டுவந்தார்.
               அடுத்து அப்பள்ளியில் நடந்த அநியாயத்தை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களைச் சந்தித்து நேரில் கூறி, கோபி மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக அவ்வாசிரியைகளை விசாரணை செய்து நடந்த உண்மைகளை அறிக்கை வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்ப, மேற்படி இயக்குநர் அப்பள்ளித் தாளாளருக்கு ஆணை ஒன்றை அனுப்பினார்.
" மேற்படி 5 ஆசிரியைகளும்ஒரே நாளில் வற்புறுத்தி ராஜினாமாக்கடிதம் வாங்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது நிருபணம் ஆகிவிட்டது.5 ஆசிரியைகளின் வாசகங்களும் ஒரே மாதிரி (stereo typed) உள்ளது.ராஜினாமாக் கடிதம் தேதி போடாமல் வாங்கப்பட்டுள்ளது. பின்னர் வேறு மையினால் தேதி போடப்பட்டுள்ளது.எனவே அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டு அறிக்கை அனுப்பவேண்டும்" என்ற ஓர் உத்திரவினை பள்ளித் தாளாளருக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அனுப்பி வைத்தார்.
             செயல்வீரான நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்களின் சீரிய முயற்சியும், அஞ்சா நெஞ்சமும், அயராத உழைப்பும் எந்தப் பிரிவு ஆசிரியர்களாக இருந்தால் என்ன, எல்லோரும் நமது ஆசிரியர்கள் என்ற நல்லெண்ணமும் மேற்படி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.ராஜன்நகர் போராட்டமும் நமது இயக்க வரலாற்றில் ஒரு வெற்றிப் படியாகும்.

எழுதியவர்:' 
"யோகசிரோமணி"பெ.சின்னசாமி.
மேனாள் அலுவலக செயலர்
.கொடுமுடி வட்டாரம்
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment