Wednesday 6 May 2020

சரித்திரம் படைத்திட்ட ஒரு மாமனிதன்-செ.மு

1968ஆம் ஆண்டில் அந்தியூர் கிளை முனைப்பாக செயல்பட்டு வந்த போது திரு.பூமாலை ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் என்ற முறையில் ஆற்றிய பணிகளுக்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.வட்டார இணைச் செயலாளராக பணியாற்றி வந்த நான் அன்று கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த திருவேங்கடசாமிக்கும்,மாஸ்டர் இராமுண்ணி நேர்முக உதவியாளராகவும்,சேலம் மாவட்ட செயலாளராகவும் பணிபுரிந்து வந்த செ.மு.வுக்கும் தந்தி செய்தி அனுப்பினேன்.


       இருவரும் உடனே வந்து சேர்ந்தனர்.சஸ்பென்சன் என்றால் வேலையே போய்விட்டது என்று மிகவும் அஞ்சி இருந்த ஆசிரியர்கள் மத்தியில் ஆற்றிய உரை மிகவும் அற்புதமானது."Suspension is not a punishment so the Managements are given suspension to teachers"என்ற வீர உரையினைக் கேட்டு கலங்கியிருந்த எங்களுக்கு புதிய தெம்பு பிறந்தது.கூட்டம் முடிந்து ஆணையாளரைச் சந்தித்து விவாதம் செய்தார்.திரு பூமாலை பணியில் சேர்ந்தார்.அன்று முதல் என் நெஞ்சில் நம்பிக்கை நட்சத்திரமாக நிறைந்து நின்றார்.அவர் கொள்கை வழியில் இயக்கம் வளர்த்தோம்.
               அடுத்து 1976 இந்திய துணை கண்டத்தில் நெருக்கடி நிலை அமுல் படுத்தப்பட்டு இருந்த காலம் அந்தியூரில் துரைராஜ் என்பவர் ஆணையாளர்.அவருக்கு "டைகர்"துரைராஜ் என்று பெயர்.அவரால் பல ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்."ஊதிய நிறுத்தம்,கண்டன குறிப்பு பதிவு"தொங்கல் நிலையில் பல ஆசிரியர்கள் சொல்ல  ஒண்ணாக்கொடுமை!
நீலகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திலிருந்து பொதுச் செயலர் செ.மு அந்தியூர் வந்து சேர்ந்தார்.ஒரு திரையரங்கில் கூட்டம்.எழுச்சிமிகு உரையாற்றி ஆசிரியர்களை ஊர்வலமாக பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் வரை கோஷமிட்டு அழைத்து சென்று ஆறு மணி நேரம் வாதாடினார்.15 நாளில் எல்லா பிரச்சினைகளும் தீர்வு செய்யப்பட்டன.ஆணையாளர் மாறுதல் செய்யப்பட்டார்.நெருக்கடி நிலையில் கோஷமிட்டு,ஊர்வலம் நடத்திக் காட்டிய செயல் வீரர் தான் செ.மு.
                  காட்சிக்கு எளியவர் கடுஞ்சொல் சொல்லாதவர்.பொதுவாழ்வில் நேர்மையானவர்.எத்தனையோ சோதனைகள் சூழ்திட்ட போதும் கலங்காது இயக்கம் காத்து வளர்த்தவர்.அவர் அடிக்கடி கூறுவார்"நான் செய்யாத தவற்றை உலகமே கூடிய நின்று சொன்னாலும் அஞ்சமாட்டேன்".என்பார்.அவரோடு பணியாற்றி பிரிந்து இன்று தனித்தனி இயக்கம் கண்டவர்கள் பலர் இருக்கலாம்.ஆனால் இயக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து பல சாதனைகள் செய்தவர் நமது செ.மு.பல கூட்டணிகள் தோன்றிடினும் நமது செ.மு .உருவாக்கிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தான் சிதையாது தமிழ் மொழி போல் உயர்ந்து நிற்கிறது.செ.மு.தொடர்ந்து ஆற்றிய பணிகள் மிளிர்ந்து நிற்கிறது.நம் எல்லோர் உள்ளமும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
வாழ்க அவரின் புகழ்!
வளர்க அவரது தொண்டு!!
எழுதியவர்:
திரு.வி.வெங்கடாசலம்.
மேனாள் ஈரோடு மாவட்டத் தலைவர்.
தகவல்:செ.வடிவேலு.

No comments:

Post a Comment