Friday 22 May 2020

சிறையில் கண்ட செ.மு.


பொதுச்செயலாளர் அவர்களை முதன்முதலில் நான் சந்தித்த இடம் சென்னையில் உள்ள- மத்திய சிறையில் கைதியாக.1972 மே 31 சிறை போராட்டத்தில் 1020 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம்.என்னையும் மற்றும் நான்கு பேரையும் சேர்த்து எவ்வித வசதியும் இல்லாத" குளோஸ் பிரிஸன்" என்ற அறையில் 5 பேருக்கும் ஒரு சட்டியோடு மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டோம்." குளோஸ் பிரிஸன்" என்கிற அறை உண்மையான கொலை செய்த குற்றவாளியை அடைத்து தண்டிக்கும் அறை என்பதைக் கேட்டு உணர்ந்து கொண்டோம்.இரவு ஆக ஆக மூட்டைப்பூச்சியின் அணிவகுப்பு துவங்கியது.பிறகு கூரையின் மேல் பகுதியிலிருந்து மழை பெய்வது போல விழுந்தது.சிறிது நேரம் சென்றதும் அடைமழை பெய்வது போல தொபு, தொபு என்று மேலே மூட்டைப்பூச்சி விழுந்தது.இரு கைகளினால் சேர்த்து வாரும் போது கை நிரம்பி வழிந்தது.( எவ்வளவு இருக்கும் என வாசகர்கள் தீர்மானிக்கவும்). 
நாங்கள் ஐவரும் சட்டை, பனியன், வேட்டி நிக்கர் நீங்கலாக களைந்து விட்டு பிறந்த மேனியோடு கதவு கம்பியை பிடித்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் என்று குதிரை ஏறுவது போல ஒருவர் கீழே குனிய மற்ற நால்வரும் கம்பியை பிடித்துக் கொண்டு குரங்கை போல தொங்கினோம்.அன்று இரவு முழுவதும் இவ்வாறு அவதிப்பட்டோம். உடல் முழுவதும் அம்மை போல் தென்பட்டது. வலியைத் தாங்க இயலவில்லை.மறுநாள் காலையில் பொதுச் செயலாளருக்கு தகவல் சென்றதும் உடனடியாக வந்து எங்களைப் பார்த்து பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்து உடன் இருந்து  பல உதவிகளைச் செய்து கொடுத்து, பிறகு வசதியான அறையில் தங்க ஏற்பாடு செய்து, சிறையில் இருந்த நாள் வரையில் தினந்தோறும் எங்களுடன் உரையாடிச்
செல்வார்.அவர் அப்போது M.L.C,அவருக்கு A வகுப்பு அறையும், உணவும் வழங்கப்பட்டது.அதை ஏற்றுக் கொள்ள மறுத்து மற்ற ஆசிரியர்களுக்கு என்ன வகுப்போ, என்ன உணவோ அதைத்தான் ஏற்றுக் கொள்வேன் எனக் கூறி ஆசிரியர்களில் ஒருவராக இருந்து பணியாற்றிய நிகழ்ச்சி எங்கள் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல பதிந்து விட்டது.எங்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டார். பொதுச்செயலாளர் ஒரு முறை பழகிவிட்டால் கடைசிவரை மறக்கமாட்டார் என்பதற்கு எடுத்துக் காட்டுகள் சொல்லி மாளாது.மேலும் ஆசிரியர்களுக்கு பிரச்சனை ஏதுவாக இருந்தாலும் பின் வாங்காமல் உறுதியோடு நின்று தீர்த்து வைத்த நிகழ்ச்சிகள் பல பல. எழுதினால் ஏட்டில் அடங்காது.வளர்க! அவர் தொண்டு!!
ஆக்கம்: நா.ஏழுமலை எம்.ஏ.எம்.எட்.மாவட்ட துணைச் செயலாளர்.திருவண்ணாமலை மாவட்டம்.
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment